Colubridae என்ற இனத்தைசார்ந்த Chrysopelea என்ற பாம்புகளே பறக்கும் பாம்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
இவை ஒரு மரத்திலிருந்து பல மீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு மரத்திற்குத் தாவிச் செல்லும் .
மரங்களில் வாழும் இந்தப் பாம்பு மிக வேகமாக மரங்களுக்கிடையே காற்றில் பறந்து செல்லக்கூடியது.
இவை பெரும்பாலும் அடர்ந்த காடுகளிலும்,உயர்ந்த மலைப்பிரதேசங்களிலும் பெரிய மரங்களில் வசிக்கின்றன.
இந்தியாவின் வட கிழக்குப் பகுதிகளான பிகார், ஒரிசா, அசாம் ஆகிய காட்டுப் பகுதிகளிலும், இலங்கை,தாய்லாந்து, இந்தோனேசியா மலேசியா போன்ற நாடுகளிலும் இவை காணப்படுகின்றன.
மற்ற மரப் பாம்புகளைப் போல இந்த வகைப் பாம்புகளும் தவளை, பல்லி, ஓணான், சிறிய பறவைகளின் முட்டைகள், பூச்சிகள் போன்றவற்றை உண்கின்றன . இந்தப் பாம்புகளின் விஷம் மனிதனுக்கு உயிர் போகும் அளவிற்கு தீங்கை விளைவிப்பதில்லை என்றாலும் சிறு பிராணிகளை அசைவற்றுப்போகச் செய்து இரையை உயிருடன் உட்கொள்ள உதவுகின்றன.
ஏறத்தாழ ஒரு மீட்டர் நீளம் வரை வளரும் இந்த பாம்பு பல்வேறு வண்ணங்கள் நிறைந்த உடலைக்கொண்டிருக்கும், மற்றும் பாம்பினங்களிலேயே மிகவும் அழகிய நிறங்கொண்ட பாம்புகளாக இவை கருதப்படுகின்றன.