பாண்டிய மன்னன் கோச்சடையன் !!!
by thulashi[ Edit ] 2014-05-21 18:34:16
ரணதீரன் கி.பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான்.
அரிகேசரியின் மகனான இவன் தனது தந்தை கி.பி. 670 ஆம் ஆண்டளவில் இறந்தபின்னர் அரியணை ஏறினான். கடல் போன்ற சேனையினை உடையவன் எனப்படுகிறான்.
ரணதீரன் கோச்சடையன் என அழைக்கப்பட்டான். செங்கோல் தென்னன், வானவன், செம்யன், மதுரகருநாடகன், கொங்கர்கோமான், மன்னர் மன்னன் போன்ற பல பட்டப் பெயர்களைக் கொண்டிருந்தான். இதற்குச் சான்றாக வேள்விக்குடிச் செப்பேடு இருப்பது குறிப்பிடத்தக்கது.
படையெடுத்துச் சென்ற இவன் முதலில் சேர நாட்டை வென்றான். பின்னர் சோழ நாடு, கொங்கு நாடு, கருநாடகம் அனைத்தினையும் வென்று அனைவரையும் கப்பம் கட்டுமாறு ஆணையிட்ட இவன் மருதூரில் நடைபெற்ற போரில் பொதிய மலைத் தலைவன் ஆய்வேளையும் மங்கலபுரத்தில் மாரதரையும் வெற்றி கொண்டவனாவான்.
சாளுக்கிய மன்னனான விக்கிரமாதித்தனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றுப் பட்டம் பெற்றான் ரணதீரன். இவ்வாறு வேள்விக்குடிச் செப்பேடும் கேந்தூர்க் கல்வெட்டும் கூறுவது குறிப்பிடத்தக்கது.
ரணதீரன் கி.பி. 710 ஆம் ஆண்டில் மரணமடைந்தான்.