விளாடிமிர் லெனின்
by Sanju[ Edit ] 2010-02-01 11:42:25
விளாடிமிர் லெனின்
விளாடிமிர் இலீச் லெனின் (ஏப்ரல் 22 [யூ.நா. ஏப்ரல் 10] 1870 – ஜனவரி 21, 1924). ஒரு ரஷ்யப் புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும், மற்றும் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்சியம்-லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவுனரும் ஆவார்.
விளாடிமிர் உலியனோவ் (லெனின்), மூன்று வயதில்.
"லெனின்" என்பது் ரஷ்யப் புரட்சிக்காக அவர் கொண்டிருந்த புனைபெயர்களில் ஒன்று. பின்னாளில் தன்னுடைய உண்மையான "விளாடிமிர் உலியனொவ்" என்கிற பெயரை "விளாடிமிர் லெனின்" என்று மாற்றிக்கொண்டார்.
விளாடிமிர் உலியனோவ் (லெனின்), 1887ல்.
லெனின் 1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். அவருடைய தந்தை இல்யா உல்யனாவ் மாவட்டக் கல்வி அதிகாரியாகப் பணி புரிந்தார். தாயார் மரியா உல்யானவ். லெனினுடைய இயற்பெயர் விளாடிமிர் உல்யானவ். அவருடன் உடன்பிறந்தவர்கள் ஐந்துபேர். இரண்டு சகோதர்கள், மூன்று சகோதரிகள். லெனினுடைய குடும்பம் கலப்பு இனத்தன்மை கொண்டது.
இவரது மூதாதையர்கள் ரஷ்யர், மோர்டோவியர், கல்மியர், யூதர், வொல்கானிய ஜேர்மானியர், சுவீடியர் எனப் பலவிதமான இனப் பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் என இவரது வரலாற்றை எழுதியவரான டிமிட்ரி வொல்க்கோகோனோவ் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
லெனின் என்கிற அவருடைய பெயரின் மூலக்காரணம் பற்றி பல கருத்துக்கள் உள்ளன. மேலும், அந்தப் பெயரினை எதற்காகத் தேர்வு செய்தார் என்று அவர் சொன்னதாக அறியப்படவில்லை. இப்பெயருக்கு லேனா என்கிற நதியின் பெயரோடு தொடர்பிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதே காலகட்டத்தில் முன்னணி ரஷ்ய மார்க்சியவாதியான ஜார்ஜி பிளிகானொவ் (Georgi Plekhanov) என்பவர் வோல்கா நதியோடு தொடர்புடைய வோல்ஜின் என்கிற புனைபெயரினைக் கொண்டிருந்தார். லேனா நதி வோல்கா நதியை விட நீண்ட தூரம் ஓடுவதாலும் எதிர்த் திசையில் ஓடுவதாலும் லெனின் என்கிற பெயரினை லெனின் தேர்வு செய்வதற்கு காரணம் என்று ஒரு கருத்தும் கூறப்படுகிறது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் லெனின் பிளிகானொவின் எதிப்பாளர் அல்ல. மேலும், லேனா படுகொலைக்கு முன்னரே இப்பெயர் வழங்கப்படுவதால் அதற்கும் இப்பெயருக்கும் தொடர்பில்லை என அறியப்படுகிறது.