கோடீஸ்வர இந்திய சிற்பி! அனிஷ் கபூர்
by Geethalakshmi[ Edit ] 2010-02-03 10:05:47
கோடீஸ்வர இந்திய சிற்பி! அனிஷ் கபூர்
இங்கிலாந்தின் கோடீஸ்வர சிற்பிகள் பட்டியலில் இந்தியரான அனிஷ் கபூர் இடம்பிடித்தார். தனது சிற்பங்கள் மூலம் அவர் ரூ.300 கோடி குவித்துள்ளார். மும்பையைச் சேர்ந்தவர் அனிஷ் கபூர். சிற்பக் கலையில் நிபுணர். 1970களில் சிற்ப வேலை காரணமாக அடிக்கடி இங்கிலாந்து சென்றார். பிறகு, அங்கு கிடைத்த அமோக வரவேற்பு காரணமாக லண்டனில் செட்டில் ஆனார். இதுவரை அவரது அருமையான சிற்பங்கள் மூலம் ரூ.300 கோடி சம்பாதித்துள்ளார். 55 வயதாகும் அனிஷ் கபூர், இப்போது இங்கிலாந்தின் முன்னணி கோடீஸ்வர சிற்பிகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
இந்த ஆண்டின் பட்டியலை சண்டே டைம்ஸ் நாளேடு வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தின் பிரபல சிற்பிகள் டாமின் ஹிர்ஸ்ட், லூசியன் பிரெட் ஆகியோருடன் அனிஷ் கபூர் இடம்பெற்றுள்ளார். தனது திறமைக்காக பிரபல டர்னர் விருது பெற்றவர் அனிஷ். இங்கிலாந்தின் முக்கிய நகரங்களில் டீஸ் வேலி ஜயன்ட்ஸ் என்ற பெயரில் பிரம்மாண்ட சிற்பங்களை வடிவமைக்கும் ரூ.113 கோடி திட்டத்தில் அனிஷ் கபூர் இப்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளார். உலகின் மிகப் பெரிய சிற்பத் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.