செம்மொழி மாநாட்டிற்காக கோவையில்
by Rameshraj[ Edit ] 2010-02-03 11:53:46
சென்னை : உலகத் தமிழ் செம்மொழி மாநாடு காரணமாக, கோவை மாநகரில் தொடர்ச்சியாக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இப்போது, "பம்பர்' பரிசாக, 118 கோடி ரூபாயில் பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்புகள், 60 கோடி ரூபாயில் சாலைகள் மேம்பாடு என இரு திட்டங்களை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, கோவை நகரில் வரும் ஜூன் மாதம் நடக்கிறது. இதையொட்டி, தமிழக அரசு பல்வேறு குழுக்களை அமைத்து, கோவை நகரில் வளர்ச்சித் திட்டப் பணிகளை செய்து வருகிறது.மாநாடு காரணமாக, நகரின் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரித்து வருவதை நினைத்து, மாநகர மக்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். இப்போது, "பம்பர்' பரிசாக, 4,000 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழக அரசு கூறியிருப்பதாவது: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, நகர ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல் எனும் திட்டத்தின் கீழ், உக்கடத்தில் 68 கோடி ரூபாய் செலவில், 2,232 அடுக்குமாடி குடியிருப்புகளும், அம்மன்குளம் என்ற இடத்தில் 50 கோடி ரூபாய் செலவில் 1,608 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்படும். மொத்தம் 118 கோடி ரூபாய் செலவில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். மாநாடு நடக்கும் கொடிசியா வளாகம் அமைந்துள்ள, சேலம் - கொச்சி சாலையை இணைக்கும் கோவை ரயில் நிலையம், பஸ் நிலையம், விமான நிலையம் ஆகியவற்றுக்கான சாலைகள், மாநாட்டு திடலின் அருகே தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும், சித்ரா - குரும்பாளையம் சாலை, சிங்காநல்லூர் பஸ் நிலையம், கோவை மத்திய பஸ் நிலையம், ராமநாதபுரம் மற்றும் போத்தனூர் ரயில் நிலையம் ஆகியவற்றுக்குச் செல்லும் சாலைகள், மேம்படுத்தப்படும். மாநகரின் உட்பகுதி மற்றும் சுற்றுப்புறங்களில் அமைந்துள்ள 96 கி.மீ., நீளம் உள்ள 72 சாலைகள், 59 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.