புற்றுநோய்: அபாய எச்சரிக்கை விடுக்கிறது WHO!
by Geethalakshmi[ Edit ] 2010-02-04 18:46:28
புற்றுநோய்: அபாய எச்சரிக்கை விடுக்கிறது WHO!
மணிலா: உலகம் முழுவதும் புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை வரும் 2030ல் 1.7 கோடியைத் தாண்டும் என கணிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்தாண்டில் புற்றுநோய் பலி எண்ணிக்கை சர்வதேச அளவில் 76 லட்சத்தைத் தாண்டும் என்றும் உலக சுகாதார நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாளை (பிப்ரவரி 4ம் தேதி) உலக புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி உலக சுகாதார நிறுவனத்தின் மண்டல இயக்குனர் ஷின் யங் சூ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
`எய்ட்ஸ், காசநோய், மலேரியா போன்ற நோய்களை விட புற்றுநோயால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.
உலகில் எட்டு பேர் இறந்தால் அதில் ஒருவர் புற்றுநோயால் பலியாகும் நிலை உள்ளது. ஆனால் இந்த இறப்புகள் தவிர்க்கக் கூடியது தான் என்பது கவனிக்கத்தக்கது.
ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் 1.2 கோடி மக்களுக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
புற்றுநோய் தடுப்பு, கண்டுபிடிப்பு, சிகிச்சை போன்றவை தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியாக வேண்டும்.
புற்றுநோய் குறித்து உலகளாவிய ஒரு பயம் இருக்கிறது. ஆனால் சரியான விழிப்புணர்வு மற்றும் தெளிவான திட்டமிடல் இருந்தால் பல புற்றுநோய்களில் இருந்து மக்கள் தப்பிக்க முடியும்.
புற்றுநோய்களில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவை சாதாரண நடவடிக்கைகளின் மூலமே தடுக்கக் கூடியவை தான்.
புகை பிடிப்பதை தவிர்த்தல், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மது பழக்கத்தை கட்டுப்படுத்துதல், போதை பொருட்களை தவிர்த்தல் போன்ற அடிப்படை விஷயங்களின் மூலமே பல்வேறு புற்றுநோய்கள் வராமல் தடுத்துவிடலாம்.
பலவிதமான புற்றுநோய்களுக்கு புகைப் பழக்கத்தை ஒதுக்குவதே மிகப்பெரிய தனியொரு தற்காப்பு நடவடிக்கையாக கருதப்படுகிறது.
அதோடு 30 நிமிட நல்ல உடற்பயிற்சிகளின் மூலம் மார்பு உள்ளிட்ட சில புற்றுநோய்களை கட்டுப்படுத்த முடியும்` என கூறப்பட்டுள்ளது.