என் குட்டி உலகம் நீ

by satheesh 2010-02-05 17:37:58

‘என் அழகை நான் ஆராதிப்பதைவிட, நீ அதிகம் ஆராதிக்கிறாயே... ஏன்? என்றாய்.
உன் அழகால் உனக்கென்ன பயன்? அதன் பயனை எல்லாம் அனுபவிப்பவன் நான்தானே! என்றேன்.
என் அழகால் உனக்கு என்ன பயன்?’
அடுத்த ஜென்மத்தில் நீ ஆணாகப் பிறந்து, ஓர் அழகியைக் காதலி. அப்போது புரியும்!
இந்த ஜென்மத்தில், புரியும்படி கொஞ்சம் சொல்லேன்.
சந்தனத்தால் என்ன பயன் என்பதை சந்தன மரத்துக்கு எப்படிப் புரிய வைப்பது? ஆனால், உன் அழகு செய்யும் மாயங்களைச் சொல்ல முடியும்?
சொல்லு... சொல்லு!
உன் இமைகள் இமைக்கும் போது என்ன நிகழ்கிறது?
என் கண்கள் ஈரமாகிறது. வேறென்ன?
அது உனக்கு! ஆனால், நீ இமைக்கும் ஒவ்வொரு முறையும், நீயும் நானும் மட்டும் வசிக்கும் குட்டி உலகத்தில் இரவு பகல் மாறிக் கொண்டே இருக்கும். இமைகளை நீ மூடினால் இரவு. திறந்தால் பகல். நீ சிரிக்கும் போதோ அந்தக் குட்டி உலகத்தில் அழகான ஒரு குட்டி நிலவே உதிக்கும்...’
அப்படியெனில், என் அழகுக்காகத்தான் நீ என்னைக் காதலிக்கிறாயா. என் அழகெல்லாம் தீர்ந்தபிறகு உன் காதலும் தீர்ந்துவிடுமா?
நீ அப்படி வருகிறாயா? சரி, உன் அழகெல்லாம் எப்போது தீரும்?
எனக்கு வயதாகிற போது! அடி முட்டாள் பெண்ணே, வயதானால் உன் அழகெல்லாம் தீர்ந்துவிடும் என்றா நினைக்கிறாய்? அழகு என்ன உன் வயதிலா இருக்கிறது?
பின்னே?
‘நான் சொல்வதைக் கவனமாகக் கேள். நீ அழகாக இருந்ததால்தான் நான் உன்னைப் பார்க்க ஆரம்பித்தேன் என்பது உண்மைதான். ஆனால், உன்னைப் பார்க்க ஆரம்பித்த பிறகு, நீ பேரழகியாக மாறிவிட்டாய் என்பதுதான் பெரும் உண்மை. ஆகையால் கவலைப்படாதே! நான் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் வரை உன் அழகு தீராது. இன்னும் சொல்வதென்றால், நீயும் நானும் இறக்கும்வரை உன் அழகு தீரவே தீராது. ஏன் என்றால், அதுவரை நான் உன்னைப் பார்த்துக் கொண்டே இருப்பேன்... காதலோடு.
இதைக் கேட்டு, நீ என் தோளில் சாய்ந்தாய். நம் குட்டி உலகத்தில் ஒரு குட்டிக் குளிர்காலம் ஆரம்பமானது!
1745
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments