ஹிட்லர்-வாழ்வும் மரணமும்-Hitler-Birth and Death

by Geethalakshmi 2010-02-06 14:18:47

ஹிட்லர்-வாழ்வும் மரணமும்-Hitler-Birth and Death



1945 ஏப்ரல் 30-ந்தேதி இரவு 9 மணி. "இன்று மாலை 4 மணிக்கு இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியும், அவர் மனைவியும் எதிர்ப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று சுவீடன் நாட்டு ரேடியோ அறிவித்தது. ரேடியோச் செய்தியை ஹிட்லர் நேரடியாகக் கேட்டார். காதலியுடன் முசோலினியின் முடிவு, ஹிட்லருக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியது. அன்றிரவு 12 மணி, பெர்லின் நகரம் முற்றிலுமாக ரஷியப்படைகள் வசமாகிவிட்டது என்றும், எந்த நேரத்திலும், சுரங்க மாளிகை தகர்க்கப்படலாம் என்றும், ஹிட்லருக்குத் தகவல் கிடைத்தது. ஹிட்லரின் முகம் இருண்டது. மவுனமாக எழுந்து, தன் தோழர்களுடன் கை குலுக்கினார்.

1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. எதிரிகளிடம் யுத்தக் கைதியாகப் பிடிபட்டால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்தார் ஹிட்லர். எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். தன் முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம் தெரிவித்தார். ஹிட்லரின் முடிவைக் கேட்டு, ஈவாபிரவுன் திடுக்கிடவில்லை. "வாழ்விலும் உங்களுடன் இருந்தேன். சாவிலும் உங்களுடன்தான் இருப்பேன். உங்களுடன் நானும் தற்கொலை செய்து கொள்வேன்" என்றாள்.

பிறகு தன் அந்தரங்க உதவியாளரை அழைத்து, "நானும் ஈவாவும் ஒன்றாக இறந்துவிடப்போகிறோம். நாங்கள் இறந்தபின், எங்கள் உடல்களை ஒரு போர்வையில் சுருட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்துச் சாம்பலாக்கி விடுங்கள். எங்கள் அறையில் உள்ள கடிதங்கள், டைரிகள், என் உடைகள், என் பேனா, கண்ணாடி முதலிய பொருள்களை சேகரித்து, ஒன்று விடாமல் எரித்துவிடுங்கள்" என்று கூறிவிட்டு, மனைவியையும் அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றார். அறைக்கதவு சாத்தப்பட்டது. வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. ஹிட்லரும் ஈவாவும் என்ன ஆனார்கள் என்று வெளியே இருந்தவர்களுக்குத் தெரியவில்லை. வெளியே நீண்ட நேரம் காத்திருந்த மந்திரிகளும், தளபதிகளும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றனர். அங்கே அவர்கள் கண்ட காட்சி: ஒரு சோபாவில், உட்கார்ந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற உடல். அவர் காலடியில் ஒரு துப்பாக்கி கிடந்தது. அதன் நுனியிலிருந்து புகை வந்து கொண்டிருந்ததால், அவர் சற்று நேரத்துக்கு முன்தான் தன்னைச் சுட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிந்தது. அவருடைய வலது காதுக்கு கீழ் அரை அங்குல அளவுக்கு துவாரம் விழுந்து, அதிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.



ஹிட்லர், துப்பாக்கி முனையை வாய்க்குள் வைத்து சுட்டதால்தான், குண்டு காதுக்கு அருகே துளைத்துக் கொண்டு சென்றிருக்கவேண்டும் என்று தளபதிகள் கருதினார்கள். ஹிட்லரின் வலது கரம் ஒரு புகைப்படத்தை மார்போடு அணைத்தபடி இருந்தது. அந்தப்படம், ஹிட்லரின் தாயாரின் புகைப்படம். தாயின் மீது ஹிட்லர் கொண்டிருந்த பாசத்தை எண்ணி அவர் நண்பர்கள் கண்ணீர் சிந்தினர். ஹிட்லர் உடல் இருந்த சோபாவில் சாய்ந்தபடி பிணமாகியிருந்தாள் அவருடைய மனைவி ஈவா. வெள்ளைப் புள்ளிகளோடு கூடிய கருநீல "மாக்சி" உடை அணிந்திருந்தாள். அவள் உடல் நீலம் பாய்ந்திருந்தது. எனவே அவள் சயனைடு விஷம் சாப்பிட்டிருக்க வேண்டும் என்பது புலனாகியது.

ரஷ்யாவின் பீரங்கி தாக்குதலால் பொடிபொடியான ஹிட்லரின் பாதாள மாளிகை ஹிட்லர் உடலையும், ஈவா உடலையும் உதவியாளர்கள் ஒரு கம்பளிப்போர்வையில் சுற்றினார்கள். பிறகு அந்த உடல்களை அந்த அறையிலிருந்து தலைமைச் செயலகத் தோட்டத்திற்கு தூக்கிக் கொண்டு போனார்கள். அங்கே, பெட்ரோலையும், எரிவாயுவையும் கொண்டு இரு உடல்களையும் எரித்துச் சாம்பலாக்கினார்கள். சில மணி நேரம் கழித்து அங்கு வந்த ரஷியப்படையினர் ஹிட்லரைக் காணாமல் திகைத்துப் போனார்கள். அவர் தற்கொலை செய்து கொண்டதும், பிணம் எரிக்கப்பட்டதும் பிறகுதான் தெரிந்தது. எனினும் ஹிட்லர் சாகவில்லை, தலைமறைவாக இருக்கிறார் என்று நீண்ட காலம் நம்பியவர்கள் ஏராளம்!

ஹிட்லர் ஈவு இரக்கமற்ற கொடியவராக இருந்தாலும், ஆச்சரியப்படத்தக்க வகையில் சில நல்ல குணங்களும் இருந்தன. ஹிட்லர், குழந்தைகளிடமும், பிராணிகளிடமும் அன்பு கொண்டவர். மது அருந்த மாட்டார். புகை பிடிக்க மாட்டார். சைவ உணவே சாப்பிடுவார்.

உலகப் போரின்போது, ஹிட்லரின் பிரசார பீரங்கியாகச் செயல்பட்டவர், கோயபல்ஸ். 1897-ல் பிறந்த கோயபல்ஸ், 8 பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பயின்றவர். தத்துவத்தில் "டாக்டர்" பட்டம் பெற்றவர். சிறந்த பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிக்கவர். 1929-ல் இவர் ஹிட்லர் மந்திரி சபையில் பிரசார மந்திரியானார். உலகப்போரின்போது, புதுப்புது உத்திகளைக் கையாண்டு, ஹிட்லரின் பெயர் உலகம் முழுவதும் பரவச் செய்தார். (போரில் ஹிட்லர் தோல்வியைச் சந்தித்தபோதும், அவர் வெற்றி பெற்று வருவதாக பிரசாரம் செய்தார். இதன் காரணமாக பொய் பேசுபவர்களை "கோயபல்ஸ்" என்று வர்ணிக்கும் வழக்கம் வந்தது.) ஹிட்லர் மீது இவர் கொண்டிருந்த பக்திக்கு அளவே இல்லை. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதற்கு மறுநாள், கோயபல்ஸ் தன் மனைவியுடனும், 6 குழந்தைகளுடனும் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார். குழந்தைகள் 2 முதல் 12 வயது வரை உள்ளவர்கள்.
18110
like
9
dislike
7
mail
flag

You must LOGIN to add comments