நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு
இத்தாலிய மன்னர் முதலாம் அம்பர்ட்டோ ஒரு முறை (28.7.1900) மோன்சா என்னும் இடத்தில் ஓர் உணவகத்தில் உணவருந்திக்கொண்டிருந்தார்.
அப்போது மன்னரின் கவனம் அந்த உணவக உரிமையாளரின் மேலேயே நிலைத்திருந்தது. உணவகத்தின் உரிமையாளரும் மன்னரையே பார்த்துக்கொண்டிருந்தார்.
“நான் அவரை முன்பே பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். நாங்கள் எங்கே சந்தித்துக்கொண்டோம் என்று கேட்கவேண்டும். அவரை அழையுங்கள்!” எனத் தம்முடன் இருந்த ஜெனரல் போன்சியா வாக்லியாவுக்குத் திடீரென ஆணை பிறப்பித்தார் மன்னர்.
ஜெனரல் வாக்லியா அழைக்கவும் உணவக உரிமையாளர் மன்னருக்கு அருகில் வந்து நின்றார். மன்னர் தம் ஐயத்தை அவரிடம் கூறினார்.
“நான் கூறுவது தவறென்றால் என்னைப் பொறுத்தருளவேண்டும். தாங்கள் என்னை உங்கள் கண்ணாடியில் பார்த்திருப்பீர்கள். நான் உங்களைப் போலவே இருக்கிறேன் எனப் பலர் என்னிடம் கூறி இருக்கிறார்கள்!” என்றார் மிகப் பணிவோடு அந்த உணவக உரிமையாளர்.
“நீங்கள் சொல்வது சரிதான்! நீங்கள் என்னைப்போலவேதான் இருக்கிறீர்கள்! மீசை, முகம், உயரம், உடலமைப்பு! எத்தகைய உருவ ஒற்றுமை? உங்கள் பெயர் என்ன?” என வியப்போடு வினாவினார் மன்னர்.
“ என் பெயர் அம்பர்ட்டோ. 14.3.1844-இல் காலை மணி பத்தரைக்கு நான் பிறந்தேன்.”
“என்ன? என் பெயர்! நான் பிறந்த நாள்! அதே நேரம்! ஆமாம், நீங்கள் எங்குப் பிறந்தீர்கள்?”
“டோரினோவில்.”
“நான் பிறந்ததும் அங்குதான்! உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?”
“ஆகிவிட்டது. 2.4.1866-இல் மார்கெரிட்டா என்னும் பெண்ணை மணந்துகொண்டேன்.”
“என் திருமண நாளும் அதுதான்! அரசியின் பெயரும் மார்கெரிட்டாதான்!”
வியப்பில் மூழ்கிப்போயிருந்த ஜெனரல் வாக்லியா இடையில் குறுக்கிட்டு, “உங்களுக்குக் குழந்தைகள் உண்டா?” என்று கேட்டார்.
“ஒரே ஒரு மகன் இருக்கிறான். விட்டோரியோ என்பது அவன் பெயர்.”
“என் ஒரே மகனின் பெயரும் அதுதான்! நீங்கள் நீண்ட காலமாகத் தொழில் செய்கிறீர்களா?” என வினாவினார் மன்னர்.
“9.1.1878-இல் நான் இந்த உணவகத்தைத் திறந்தேன்.”
“நான் இத்தாலிக்கு மன்னரான நாளும் அதுதான்! மிக விந்தையாக இருக்கிறதே! என் வாழ்நாளில் நிகழ்ந்தவற்றுள் இதுதான் மிகச் சிறப்பான சந்திப்பு!” என வியப்பு மேலிடக் கூறிய மன்னர் மறுநாள் நடைபெறவிருக்கும் விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சிக்குப் பார்வையாளராக வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
மறுநாள் விளையாட்டரங்கில் மன்னர் காத்திருந்தார்.
அங்கு விரைந்துவந்த ஜெனரல் வாக்லியா, “அந்த உணவக உரிமையாளர் சற்று முன்னர் இறந்துவிட்டார்! யாரோ அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்!” எனப் பதற்றத்தோடு மன்னரிடம் கூறினார்.
“மிக மிக வருந்துதற்குரிய செய்தி! பிண அடக்கம் எப்போது நடைபெறும் என அறிந்து வாருங்கள்; நான் கலந்துகொள்ள விரும்புகிறேன்!” என மன்னர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே எங்கிருந்தோ ஒரு துப்பாக்கி மூன்று முறை வெடித்தது! இரண்டு குண்டுகள் அவரின் இதயத்தில் பாய்ந்து உடனடியாக அவரைக் கொன்றன.
நம்ப இயலாத அளவுக்குப் பலவகையிலும் ஒத்திருந்த இருவரின் வாழ்வு ஒரே நாளில் ஒரே விதத்தில் முடிந்தது.
(குறிப்பு: நம்ப முடியாத கதைதான்; ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இது வரலாறு; கதையன்று.)